ஆக்சிஜனை காரணம் காட்டி வேஷமா? ஸ்டெர்லைட் குறித்து கடுமையாக விமர்சிக்கும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை என்பது தாமிரத்தை உருக்கும் தொழிலுக்காக கடந்த 1993 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த ஆலையை சுரங்கத்தொழில், உலோகத்தொழில் போன்றவற்றில் ஈடுபடும் பிரபல நிறுவனமான வேதாந்தா நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகளால் தூத்துக்குடி சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் விவசாய நிலங்கள் சீர்க்கெட்டு போவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையாகக் குற்றம் சுமத்தி வந்தனர்.
இதுதொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்திலும் மனு அளிக்கப்பட்டது. அதேபோல சென்னை உயர்நீதிமன்றம் முதற்கொண்டு பல்வேறு நீதிமன்றங்களில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் இந்த வழக்குகள் அனைத்திலும் முழுமையான தீர்வு கிடைக்காத பட்சத்தில் தூத்துக்குடி பகுதிகளில் இதுதொடர்பாக சில அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. அதையடுத்து பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இப்படி போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் ஸ்டெர்லைட் ஆலை பகுதிகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்யுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு அழுத்தங்களை கொடுத்து வந்தது. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலம் நோக்கி பல நூற்றுக்கணக்கான மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை அரசாங்கம் தானாக முன்வந்து மூடுமாறு கோரிக்கை வைத்து பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு ஏற்கனவே தடை விதித்தப்போதும் இந்தப் பேரணி தொடர்ந்து நடத்தப்பட்டது.
அப்போது காவல் துறையினருக்கும் பேரணி காரர்களுக்கும் நடைபெற்ற மோதல்களால் கிட்டத்தட்ட 13 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசை குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கும் வகையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை தயாரித்துக் கொடுக்கிறோம் என வேதாந்த நிறுவனம் ஒரு கோரிக்கை மனுவை கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தது. இந்த கோரிக்கையை தொடர்ந்து தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை தயாரிக்கலாம் என்ற ஆலோசனையை நீதிபதி போக்டோ அடங்கிய அமர்வு கூறிய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வேதாந்த நிறுவனம், ஆக்சிஜனை தயாரிக்க அனுபவம் உள்ள ஊழியர்கள் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்து இன்று கூடுதல் மனு அளித்து இருக்கிறது.
இந்நிலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்காக மட்டும் வெறும் 4 மாதங்கள் வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த ஒப்புதல் ஒருவகையில் பாராட்டப் பட்டாலும் சில சமூகநல ஆர்வலர்கள் இதை விமர்சித்து வருகின்றனர். காரணம் ஸ்டெர்லைட் ஆலை என்பது வெறும் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான நிறுவனம் மட்டும் அல்ல. இதன் பின்னணியில் வேறு அரசியலும் ஒளிந்து இருக்கலாம் என விமர்சித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஸ்டெர்லைட் ஆலையின் இத்தகைய போக்கு குறித்து விமர்சித்து பூவுலகு நண்பர்கள் அமைப்பை சார்ந்த சௌந்தரராஜன் அவர்கள் நமக்கு பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார். அந்த நேர்காணல் பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com