7.5% உள்இட ஒதுக்கீட்டு திட்டத்தால் பயன்பெற்ற மாணவர்கள்… முதல்வருக்கு கண்ணீர்மல்க நன்றி!!!

 

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றிப்பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு உள்இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு பல போராட்டங்களுக்கு இடையில் அமல்படுத்தியது. இதனால் 400 ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகும் எனத் தமிழக அரசு உறுதி அளித்து இருந்தது. இந்நிலையில் மருத்துப் படிப்புக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று 7.5% உள்இட ஒதுக்கீட்டு திட்டத்தால் பல ஏழை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இழந்த அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில வாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்கள் தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வினை மத்திய அரசு அறிமுகப் படுத்தியது. இந்த நுழைவுத் தேர்வினால் அரசு பள்ளி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டது. இதை களையும் விதமாக தமிழக அரசு மருத்துவப் படிப்பில் சிறப்பு உள்இட ஒதுக்கீட்டு வசதியை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் தங்களது கனவை நனவாக்கிக் கொள்ள முடியும்.

மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசே பள்ளிகளின் மூலம் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சியையும் வழங்கி வருகிறது. இதனால் மாணவர்கள் எளிதாக நீட் தேர்வில் வெற்றிபெறும் வாய்ப்பினையும் தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது. ஏழைகள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் கொண்டு வந்த இத்தகைய திட்டங்களினால் தற்போது எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் 7.5% சிறப்பு உள்இட ஒதுக்கீட்டு திட்டத்தால் பயன்பெற்ற மாணவர்கள் அனைவரும் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்து உள்ளனர்.

1.கன்னியாக்குமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் பைங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தாணிவினை பகுதியை சேர்ந்த மாணவி ஆர்.ஜெ. நந்தனா. இவருடைய தகப்பனார் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்நிலையிலும் மூஞ்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-12 ஆம் வகுப்பு வரை படித்த இவர் நீட் தேர்வில் 130 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். தற்போது தமிழக அரசு கொண்டுவந்த 7.5% உள்இட ஒதுக்கீட்டு திட்டத்தால் மருத்துவம் பயில வாய்ப்பு பெற்றிருக்கிறார்.

2.கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட திக்குறிச்சி வருவிளாகம் பகுதியைச் சேர்ந்த மாணவி கே.ரேஷ்மா. தக்கலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் 11-12 ஆம் வகுப்பு வரை படித்த இவரின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வில் 155 மதிப்பெண்களை பெற்றுள்ளார். தற்போது தமிழக அரசு கொண்டுவந்த 7.5% உள்இட ஒதுக்கீட்டு திட்டத்தால் மருத்துவம் பயில வாய்ப்பு பெற்றிருக்கிறார்.

3. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் குமாரபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏரிச்சமூட்டுவினை பகுதியைச் சேர்ந்த மாணவி ஆஷிகா. திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-12 ஆம் வகுப்பு வரை பயின்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு தாயார் உயிரிழந்த நிலையிலும் தனது அயராத உழைப்பினால் நீட் தேர்வில் 141 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதனால் தமிழக அரசு கொண்டுவந்த 7.5% உள்இட ஒதுக்கீட்டு திட்டத்தால் மருத்துவம் பயில வாய்ப்பு பெற்றிருக்கிறார்.

4.கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியம் புதுக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலம்பாறையடி வீடு பகுதியைச் சேர்ந்த மாணவன் எஸ்.எஸ்.ராகுல் வர்ஷன். மூஞ்சிறை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-12 ஆம் வகுப்பு வரை படித்த இவருடைய அண்ணனுக்கும் மருத்துவர் ஆக வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால் நீட் தேர்வு முறையினால் தற்போது மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். பெட்டிக்கடை மட்டுமே வைத்திருக்கும் தந்தைக்கு பிறந்த இவர் நீட் தேர்வில் 130 மதிப்பெண்களை பெற்றுள்ளார். தற்போது தமிழக அரசு கொண்டுவந்த 7.5% உள்இட ஒதுக்கீட்டு திட்டத்தால் மருத்துவம் பயில வாய்ப்பு பெற்றிருக்கிறார்.

5. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் பத்மநாபம் நகராட்சி மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த செல்வன் எம்.கே. அப்துல்ரகுமான். கன்னியாகுமரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-12 ஆம் வகுப்பு வரை படித்த இவர் நீட் தேர்வில் 377 மதிப்பெண்களை பெற்றும் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். இந்நிலையில் தமிழக அரசு கொண்டுவந்த 7.5% உள்இட ஒதுக்கீட்டு திட்டத்தால் மருத்துவம் பயில தற்போது வாய்ப்பு பெற்றிருக்கிறார். இவர்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.