ரஜினியுடன் முன்னாள் மத்திய அமைச்சரின் மகள் சந்திப்பு

  • IndiaGlitz, [Monday,August 07 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் அவரை அவ்வப்போது சந்தித்து வருகின்றனர். மேலும் ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன் அவரை எப்படியாவது தங்கள் கட்சிக்கு இழுக்கவும் சில கட்சிகள் முயற்சி செய்து கொண்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக பாஜக ரஜினிக்கு தூண்டில் போட்டு வரும் நிலையில் நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் புரமோத் மகாஜனின் மகளும், பா.ஜ.க-வின் இளைஞர் பிரிவான 'பாரதிய ஜனதா யுவ மோர்சா'வுக்குத் தலைவருமான பூனம் மகாஜன் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து பூனம் மகாஜன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கும்போது, "நான் சந்தித்ததில் மிக எளிமையான ஜோடி, லதா ஜி அண்ட் தலைவா" என்று பதிவு செய்ததோடு, ரஜினி மற்றும் லதாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.