ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா குறித்து பூச்சி முருகனின் ஆவேச பதிவு!
- IndiaGlitz, [Saturday,July 03 2021]
மத்திய அரசு விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ள ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதா திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, கார்த்திக் சுப்புராஜ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் முன்னால் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் தணிக்கை குழுவின் உறுப்பினர் பூச்சி முருகன் தனது கடும் கண்டனத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா கருத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட சவால் நம் நாட்டில் திரைப்படம் என்பது எல்லா தரப்பையும் சென்று சேரும் வலிமையான ஊடகம். ஒளிப்பதிவு சட்ட திருத்தம் என்ற பெயரில் ஒன்றிய அரசு அதன் குரல்வளையை நெரிப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. தணிக்கை செய்யப்பட்ட படங்களை யார் விரும்பினாலும் தடை செய்யலாம் என்பது கருத்து சுதந்திரத்துக்கான மிகப்பெரும் அச்சுறுத்தல்.
சமூகவலைதளங்களை தொடர்ந்து தற்போது திரைத்துறையை தன் பாசிச கரங்களால் நெரிக்கிறது ஒன்றிய அரசு. அடுத்து இது ஊடகங்களை நோக்கியும் பாயலாம். திரைத்துறையை தன் கைப்பாவையாக மாற்ற ஒன்றிய அரசு நினைக்கிறது. இது ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்துக்கே விடுக்கப்பட்ட சவால். சமூகத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதே திரைப்படம். இந்த சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தால் படைப்பாளி ஒரு கதையை யோசிக்கும்போதே ஒன்றிய அரசுக்கு ஆதரவாக மட்டுமே யோசிக்க முடியும். இதன் மூலம் மக்களை சிந்தனை அடிமைகளாக மாற்ற முயற்சிக்கிறது ஒன்றிய அரசு. ஒரு கலைஞன் என்ற முறையிலும் முன்னாள் தணிக்கைக் குழு உறுப்பினர் என்ற முறையிலும் என் கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.