'பொன்னியின் செல்வன்' ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு: ரசிகர்கள் அதிருப்தி!

திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஓடிடி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற ’பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

இதன் நிலையில் சற்று முன் அமேசான் பிரைம் வீடியோ தனது சமூக வலைத்தளத்தில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த படத்தை பார்க்க சப்ஸ்கிரைப் செய்த வாடிக்கையாளர்களாக இருந்தாலும் வாடகை செலுத்த வேண்டும் என்று அறிவித்து உள்ளதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புதிய திரைப்படங்களை பார்ப்பதற்காகத்தான் சப்ஸ்கிரைப் செய்கிறோம் என்றும் ஆனால் ஒரு சில குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் வாடகை கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் மட்டுமே வாடகை அடிப்படையில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஹிந்தி மொழியில் ’பொன்னியின் செல்வன்' எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.