'பொன்னியின் செல்வன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? சாதனை வசூல்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்த படத்தை பார்க்க இதுவரை பல ஆண்டுகளாக திரையரங்குகளுக்கு வராதவர்கள் கூட வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முதல் நாள் வசூல் சாதனை செய்யும் என்று ஏற்கனவே எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகிஉள்ளது.

தமிழகத்தில் மட்டும் இந்தப் படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் இந்தி பதிப்பில் மட்டும் ரூ.15 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே ரீதியில் சென்றால் இந்த படம் இன்று அல்லது நாளைக்குள் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்றும் தமிழ் திரை உலகில் அதிக வசூல் செய்த ’விக்ரம்’ படத்திற்கு இணையாக இந்த படம் வசூல் செய்யும் என்றும் டிரேடிங் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு கிடைத்த பாசிடிவ் விமர்சனம் காரணமாக ஏராளமானோர் இந்த படத்தை பார்க்க முன்பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றும் நாளையும் சனி ஞாயிறு விடுமுறை என்பதும் அதேபோல் அக்டோபர் 4, 5 சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விடுமுறை என்பதால் இந்த படத்தின் வசூல் பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.