'பொன்னியின் செல்வன்' இரண்டு நாள் வசூல் இத்தனை கோடியா? 'விக்ரம்' வசூலை முறியடிக்குமா?

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை திரையரங்குகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக வராதவர்கள் கூட தற்போது திரையரங்குகளுக்கு இந்த படத்தை பார்ப்பதற்காக வருகிறார்கள் என்பதும் குறிப்பாக பேமிலி ஆடியன்ஸ் குவிந்து வருகிறது என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.80 கோடி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளில் இந்த படம் 70 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து இரண்டே நாட்களில் 150 கோடி வசூல் செய்த படம் தொடர்ச்சியாக விடுமுறை நாள் இருப்பதால் இன்னும் ஒரு சில நாட்களில் மிகப்பெரிய வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படமாக கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் சாதனை செய்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் ’விக்ரம்’ படத்தின் 450 கோடி வசூல் என்ற சாதனையை ‘பொன்னியின் செல்வன்’ முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு இந்தியாவிலிருந்து மட்டுமின்றி அமெரிக்கா உள்பட பல நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் அமெரிக்காவில் ஒரே நாளில் மூன்று மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.