ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ சிக்கன் பிரியாணி: 2 மணி நேரத்தில் காலியான அதிசயம்
- IndiaGlitz, [Friday,March 13 2020]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக சிக்கன் சாப்பிடும் பழக்கம் உள்ள பலர் வதந்தி காரணமாக சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தி வருகின்றனர். சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவி வருவதாக ஒரு சிலர் வதந்தியை கிளப்பியுள்ள நிலையில் இதுகுறித்து சிக்கன் வியாபாரிகள் காவல் துறையில் புகார் அளித்து உள்ளனர் என்பதும், வதந்தி பரப்பிய ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பொன்னேரியில் புதிதாக சிக்கன் பிரியாணி கடை இன்று ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதி காரணமாக சிக்கன் பிரியாணியை பொதுமக்கள் தவிர்த்து வரும் நிலையில் புதிய கடையா? என்ற ஆச்சரியம் ஏற்பட்டது.
ஆனால் புதிய கடைக்காரரின் வித்தியாசமாக அறிவிப்பால் முதல் நாளே தனது கடையில் அனைவரையும் வாங்க வைக்க ஒரு உத்தியைக் கையாண்டார். அதன்படி ஒரு கிலோ பிரியாணி ஒரு ரூபாய் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு காட்டுத்தீ போல் பொன்னேரி முழுவதும் பரவி இரண்டே மணி நேரத்தில் 120 கிலோ பிரியாணி விற்பனையானது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தலையிடும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சிக்கன் பிரியாணிக்கும் கொரோனாவுக்கும் சம்பந்தமில்லை என்பதை மக்களுக்கு உணர்த்தவே ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கும் அறிவிப்பை வெளியிட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்தார். புதிய கடையின் உரிமையாளருக்கு இன்று ஒருநாள் நஷ்டம் என்றாலும் வதந்தியை தவிடுபொடியாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.