பொங்கல் கொண்டாட்டத்துக்கு… இனிப்பு பரிசை அறிவித்த எடப்பாடியார்…
- IndiaGlitz, [Saturday,December 19 2020]
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசாக அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை போன்றவை அடங்கிய தொகுப்பை வழங்கி வருகிறது. ஆனால் கொரோனா காலத்தில் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் நிலைமையை புரிந்து கொண்ட தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 பணத்தையும் சேர்த்து வழங்க முன்வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் இன்று வெளியிட்டு இருக்கிறார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தனது சொந்த ஊரில் இருந்தே தொடங்கி இருக்கிறார். மேலும் பிரச்சாரத்திற்கு நடுவிலேயே அப்பகுதியில் 5 அம்மா மினி கிளினிக்குகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் நிவர், புரெவி போன்ற புயல் பாதிப்புகளும் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பர். இதைக் கருத்தில் கொண்ட தமிழக முதல்வர் விவசாயிகள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவை அடங்கிய தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைத் தாரர்களுக்கும் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். இந்தத் திட்டம் வரும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.