ரஜினி பேசினால் அதில் ஆழ்ந்த அர்த்தம் இருக்கும்: சொன்னது யார் தெரியுமா?
- IndiaGlitz, [Thursday,November 15 2018]
ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்தாலே அன்றைய தினம் ஊடகங்களுக்கு நல்ல தீனியாகத்தான் இருக்கும். அவர் சொன்ன ஒரு கருத்தை மாற்றி கூறியும், திரித்து கூறியும் பரபரப்பை ஏற்படுத்துவதையே ஒருசில ஊடகங்கள் முழுநேர தொழிலாக கொண்டுள்ளன. சமீபத்தில் 'எந்த 7 பேர்' மற்றும் '10 பேர் பலசாலி' ஆகிய ரஜினி கூறிய கருத்தை விமர்சனம் செய்யாதவர்களே இல்லை என்று கூறலாம்.
இந்த நிலையில் ரஜினியின் இந்த கருத்து குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, 'ரஜினிகாந்த் எந்த ஒரு விஷயத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக்கூடியவர் இல்லை. ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால், அதில் ஆழ்ந்த அர்த்தம் இருக்கும். 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால், 10 பேருக்கும் தெரியும், அந்த ஒற்றை மனிதரை வெல்ல முடியாது என்று, இதனால்தான் 10 பேர் 20 பேராக அதிகரிக்கப் பார்க்கிறார்கள்.
பாஜக ஆபத்தான கட்சி என்று ரஜினிகாந்த் சொல்லியிருக்க வாய்ப்பு கிடையாது. அவர், இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை. கடந்த ஆண்டுகளில் அரசியல் குறித்து, அவர் எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை. ஆனால், தற்போது அவர் தினம் தினம் கருத்துகள் கூறி வருகிறார். அவர் அரசியலில் குதிக்கவில்லை. குளிப்பதற்காக படிக்கட்டில் இறங்கி வருகிறார். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் ரஜினியின் பேச்சு குறித்து கூறினார்.