கமல் களப்பணி: அரசியல் தலைவர்களின் ரியாக்சன் என்ன?
- IndiaGlitz, [Saturday,October 28 2017]
நடிகர் கமல்ஹாசன் இன்று காலை எண்ணூர் துறைமுகத்திற்கு நேரடியாக என்று களப்பணி ஆய்வில் இறங்கியது அப்பகுதி மக்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கமலின் இந்த அதிரடியை அரசியல்வாதிகள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கமலுக்கு அவர்கள் பாராட்டுக்களை தெரிவிக்கவும் தயங்கவில்லை.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கமலின் களப்பணி குறித்து கூறுகையில், 'எண்ணுர் துறைமுக கழிமுகத்தில் கமல் பார்வையிட்டதற்கு பாராட்டுக்கள். இதேபோல் கமல், தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டால் டெங்கு, கொசு ஒழிப்புக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதேபோல் தமிழக அமைச்சர் ஜெயகுமார் கமலின் களப்பணி குறித்து கூறுகையில், 'ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் களத்திற்கு சென்று ஆய்வு செய்யலாம். கொசஸ்தலை ஆற்றின் முகத்துவார பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்..
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இதுகுறித்து கூறுகையில், 'கமல்ஹாசன் தீவிரமான மக்கள் பணியில் ஈடுபடவிருக்கின்றார் என்பதை இன்றைய அவரது களப்பணி உணர்த்துகிறது. கொசஸ்தலை ஆற்றை பார்வையிடும் பணியில் அவர் ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சினிமா போலவே அரசியலிலும் அவர் முத்திரை பதிப்பார் என நம்புகிறேன்' என்று கூறினார்.
கமல்ஹாசனின் களப்பணிக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அவரை விமர்சனம் செய்த அரசியல்வாதிகளே பாராட்டு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.