பொள்ளாச்சி பாலியல் வழக்கு....! அதிமுக பிரமுகருக்கு ஜாமீன் மனு தள்ளுபடி...!
- IndiaGlitz, [Thursday,July 08 2021]
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான, அதிமுக பிரமுகர் அருளானந்தத்தின் ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய வழக்குதான் பொள்ளாச்சி பாலியல் வழக்கு. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட 5 காமக்கொடூன்கள் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை கையாண்டு வந்த சிபிஐ அதிகரிகள், குற்றப்பத்திரிக்கையை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து இவ்வழக்கு சார்பாக பொள்ளாச்சி அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹேரன் பால், பாபு உள்ளிட்டோரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், நீதிமன்றக் காவலில் இவர்களை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணையில், காணொளிக்காட்சி மூலம் கைதிகள் மூவரும் ஜெயிலில் இருந்தபடியே, நீதிபதி முன் ஆஜரானார்கள். இதில் அருளானந்தம் சார்பாக முன்ஜாமீன் கோரப்பட்டது.
ஆனால் இதுவரை 8 பெண்கள் புகார் கொடுத்துள்ளதால், அருளானந்தத்திற்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில், அவர் வெளியில் சென்றால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என சிபிஐ தரப்பு சார்பாக வாதிடப்பட்டது. இந்தநிலையில் கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதுவரை பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் மட்டுமே புகார் கொடுத்திருந்த நிலையில், கடந்த 2 மாதத்தில் மேலும் 3 பேர் புகாரளித்துள்ளனர். கொரோனா அச்சத்தால், இவ்வழக்கு குறித்த விசாரணை தடைப்பட்டு இந்தநிலையில், தற்சமயம் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் சிலர் புகாரளிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.