சிபிஐக்கு செல்கிறது பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான இளம்பெண்களை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்ததாக நால்வர் கைதாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், பிரபல அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் தலையீடு காரணமாக காவல்துறையினர் சுதந்திரமாக இந்த வழக்கை விசாரணை செய்யாமல் இருப்பதாகவும் சமூக வலைத்தள பயனாளிகளும், எதிர்க்கட்சி தலைவர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒருசிலரும், சிபிஐ இந்த வழக்கை விசாரணை செய்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதோடு, குற்றவாளிகளுக்கும் தண்டனை கிடைக்கும் என்று ஒருசிலரும் கருத்து கூறி வந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக அரசு பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழக காவல்துறையிடம் இருந்து இந்த வழக்கு சிபிசிஐடியிடம் மாற்றப்பட்ட சில மணி நேரங்களில் சிபிஐக்கு மாற்ற முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.