முதல்வர் பதவியில் சசிகலா. அரசியல் தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்
- IndiaGlitz, [Monday,February 06 2017]
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் முதல்வர் பதவியை ஏற்ற ஓ.பன்னீர்செல்வம், வர்தா புயல், ஜல்லிக்கட்டு பிரச்சனை, மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலை, எதிர்க்கட்சிகளுடன் அரவணைப்பு என சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். எனவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா விரைவில் முதல்வர் பதவியில் அமர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சசிகலாவுக்கு பிரபல அரசியல் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் சசிகலா முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து கூறியதை பார்ப்போம்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின்: சசிகலாவை முதலமைச்சராக மக்கள் ஏற்கமாட்டார்கள்
எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வாகியது குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை
நடிகர் ஆனந்தராஜ்: சட்டமன்ற தலைவராக சசிகலாவை தேர்வு செய்தது அவசர முடிவு
மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்: அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு எனது வாழ்த்துக்கள்
இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்: அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை வரவேற்கிறேன்
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரெங்கசாமி: அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வுக்கு எனது வாழ்த்துக்கள்
தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்: அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது உட்கட்சி விவகாரம்
த.மா.கா.தலைவர் வாசன்: முதலமைச்சரை மாற்ற வேண்டியதன் அவசியம், அவசரம் குறித்து அதிமுக விளக்கம் அளிக்க வேண்டும்
பாமக நிறுவனர் ராமதாஸ்: அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்: மக்கள் கருத்துக்கு எதிராக தமிழக அரசும், அதிமுகவும் செயல்படுகிறது
சசிகலாவை முதல்வராக அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் முழு அளவில் ஏற்றுக்கொண்டாலும், பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் அவரை முதல்வராக ஏற்றுக்கொள்வார்களா? என்பதும், முதல்வராக சசிகலாவின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதும் போகப்போகத்தான் தெரியும்.