அரசியல்வாதிகள் தான் உண்மையில் தேசிய பேரிடர்கள்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,December 01 2018]

கடந்த பிப்ரவரி மாதம் உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சியை ஆரம்பித்த பின்னரும், கட்சி ஆரம்பிக்கும் முன்னரும், அதிமுக அமைச்சர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி கொண்டே வந்தது. இருதரப்பினர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டு வந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயல் இரு தரப்பினர்களுக்கும் கிடைத்த ஒரு விவாத பொருளாக மாறியது.

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அரசு புளுத்த அரிசி கொடுத்துள்ளதாக கமல்ஹாசன் கூற அதற்கு அதிமுக அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு அனுபவம் இல்லை என்றும் கமல்ஹாசனின் மூளையில்தான் கோளாறு என்றும் பதிலடி கொடுத்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும்' என்று கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த தைரியமான விமர்சனத்தை டுவிட்டர் பயனாளிகள் பாராட்டி வருகின்றனர்.