திருச்சி கர்ப்பிணி பெண் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கண்டனம்
- IndiaGlitz, [Thursday,March 08 2018]
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த உஷா என்ற கர்ப்பிணி பெண்ணை காவல்துறை ஆய்வாளர் ஒருவர் எட்டி உதைத்ததால் பரிதாபமாக பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று உலகமே மகளிர் தினம் கொண்டாடி வரும் நிலையில் மூன்று மாத சிசுவுடன் பெண் ஒருவர் மரணம் அடைய ஒரு காவல்துறை அதிகாரியே காரணமாக இருந்திருப்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி தரக்குடிய சம்பவமாக உள்ளது.
இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணின் மரணத்திற்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து கூறியதை தற்போது பார்ப்போம்:
நடிகர் சரத்குமார்: மன்னிக்க முடியாத அநீதி ஒரு தாயாய் உருவாகிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திருச்சிக்கு அருகே நடந்திருக்கிறது. வன்மையாக கண்டிக்கிறேன்”
நடிகை கௌதமி: திருச்சியில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது
ஜி.வி.பிரகாஷ்: இந்த செய்தியை வாசிக்கும்போதே வருத்தமாக உள்ளது. இது எந்த வகையான நடத்தை?
நடிகை கஸ்தூரி: ஹெல்மெட் அணியாமல் சவாரி உயிருக்கு ஆபத்து என்றார்களே, அந்த ஆபத்து யாரால் என்று இன்று புரிந்தது. டூட்டியில் குடித்திருக்கும் போலீஸ்காரருக்கு அதிகபட்சமாக என்ன தண்டனை? இரண்டு உயிரை குடித்திருக்கும் போலிஸ்காரருக்கு என்ன தண்டனை?
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகள் மீது கடுமையாக நடந்து கொண்டதன் விளைவாக அப்பாவி கர்ப்பிணி பெண் இறப்பு மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்த கொடும் செயலுக்கு காரணமான அதிகாரி மீது தமிழக அரசு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருவெறும்பூர் எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி: திருவெறும்பூரில் காவல்துறையினர் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. கழக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவையேற்று டி.ஜி.பியிடம் பேசி சம்பந்தபட்டவரை உடனடியாக கைது செய்து,உரிய தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளேன்.அவரும் உறுதியளித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்: கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்: கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்