சின்னத்திரை சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதி தான் காரணம்: கணவர் ஹேமந்த் திடுக் தகவல்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்பட பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த சின்னத்திரை சித்ரா திடீரென கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில் அவரது கணவர் ஹேமந்தை கைது செய்தனர். அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் சித்ராவின் மரண வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திடீரென சித்ராவின் மரணத்திற்கு ஒரு முக்கிய அரசியல்வாதி தான் காரணம் என ஹேமந்த் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

நானும் என்னுடைய மனைவி சித்ராவும் மிகுந்த அன்னியோன்யத்துடன் இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது சின்னத்திரை பிரபலங்கள் எல்லாருக்கும் தெரியும். என்னுடைய மனைவி சித்ரா தற்கொலை செய்து கொண்ட போதே நானும் எனது வாழ்வை முடித்து கொள்ள எண்ணினேன். ஆனால், என்னுடைய மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக என் மீது சேறு வாரி இறைத்தவர்கள் முன்பு, நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கவே இன்னும் உயிருடன் இருக்கிறேன்.  என்னுடைய மனைவியின் தற்கொலைக்கு பிறகு, பணபலமும், அரசியல் பலமும் கொண்ட மாபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரிந்த உண்மை.. அவர்களுக்கு பயந்து அதை வெளியில் சொல்ல அனைவரும் தயங்குகிறார்கள். அவர்களின் பண பலத்துக்கு முன்னால், என்னை போன்ற சாதாரண மனிதனால் எதுவும் செய்ய இயலாது. அப்படி செய்தாலும் என்னுடைய மனைவி எனக்கு திரும்ப கிடைக்க போவதில்லை என்பதை நான் உணர்ந்துள்ளேன்.  

என் மீது சுமத்தப்பட்டுள்ள பழியை போக்கவே இப்போது வாழ்ந்து வருகிறேன். சுப்பாராம், சரோஜாராவ், மதுசூதனன், சாய் வெங்கடேஷ், யாமினி, இம்மானுவேல் ராஜா உள்ளிட்ட 7 பேர் அடங்கிய ஒரு கும்பல் என் மூலம் என்னுடைய மனைவி சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக இருந்த பணபலம் படைத்த மாபியா கும்பலை தொடர்பு கொண்டு அவர்களிடம் இருந்து பணம் பெற முயல்கிறார்கள்.

இந்த செயலுக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் என்னை கொலை செய்துவிடுவதாக அந்த கும்பல் மிரட்டுகிறது.  இன்னொருபுறம் என் மனைவியின் தற்கொலைக்கு காரணமான கும்பலின் பெயரை வெளியில் சொன்னால், என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவோம் என்று அவர்கள் மிரட்டுகிறார்கள். இவ்வாறு இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி என்னை மிரட்டி வருவதால், என்னுடைய உயிருக்கு பெரும் ஆபத்து இருக்கிறது.

என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கும்வரை, நான் உயிரோடு விரும்புகிறேன்.. உயிருக்கு பயந்து என் வீட்டிலிருந்து வெளியேறி இன்னொரு இடத்தில் தஞ்சம் புகுந்துள்ளேன்..  என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கி என்னுடைய உயிரை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் முன்பு, என்னுடைய உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், என் மனைவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்தவர்களின் விவரங்களையும் என்னுடைய நம்பிக்கைக்கு உரிய சிலர் வெளிக்கொணருவார்கள்' என்று ஹேம்நாத் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.