பிறந்த நாள் விழாவில் பிரியாணியும் கொரோனாவும் பரிமாறிய அரசியல் பிரமுகர்

அரசியல் பிரமுகர் ஒருவர் தனது பிறந்த நாள் விழாவில் பிரியாணியை மட்டுமின்றி கொரோனாவையும் சேர்த்து பரிமாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிபூண்டியை சேர்ந்த அரசியல் பிரமுகர் குணசேகர். இவர் தன்னுடைய ஐம்பதாவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து 500 பேர்களை அழைத்து பிரியாணி விருந்து வைத்தார். மது மற்றும் மட்டன், சிக்கன் பிரியாணி என்றவுடன் இந்த விருந்தில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

இந்த விருந்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியின்றி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விழா முடிந்த மறுநாள் காய்ச்சல் காரணமாக குணசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா பாசிட்டிவ் என உறுதியானது. இதனை அடுத்து அவர் வைத்த விருந்தை ஏற்பாடு செய்தவர்களுக்கும் பரிசோதனை செய்தபோது 15 பேர்களுக்கு கொரோனா உறுதியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இந்த விருந்தில் கலந்துகொண்டு பிரியாணி சாப்பிட்ட 500 பேர்கள் தங்களுக்கும் கொரோனா பரவி இருக்குமோ என்ற அச்சத்துடன் தற்போது தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த விருந்தை ஏற்பாடு செய்த குணசேகர் உள்பட 50 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மதுவுடன் ஓசி பிரியாணி என்றவுடன் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்துகொண்ட 500 பேரும் தற்போது கொரோனா பயத்தால் வெளியே வரவே அச்சப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.