ரூபாய் தட்டுப்பாடு குறித்த விஜய் கருத்துக்கு ஏற்பட்ட ஆதரவும் எதிர்ப்பும்...
- IndiaGlitz, [Tuesday,November 15 2016]
இளையதளபதி விஜய் இன்று காலை பிரதமரின் துணிச்சலான நடவடிக்கை குறித்தும் அதேநேரத்தில் இந்த நடவடிக்கையால் ஏழை, எளிய மக்கள் படும் வேதனைகள் குறித்தும் செய்தியாளர்களிடம் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
விஜய்யின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சொர்ணா சேதுராமன் கூறியபோது, 'சாமானிய மக்களின் வேதனைகளை நடிகர் விஜய் கொட்டி இருக்கிறார். இதுதான் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் மனநிலை என்பதை மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும். விஜய் கூறியது போல ஏழை, எளிய, நடுத்தர மக்கள் படும் வேதனைகள், துன்பங்களைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
விஜய்யின் கருத்தை காங்கிரஸ் கட்சி பாராட்டியுள்ளதை அடுத்து பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் விஜய்யின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, 'ஏழை, எளிய மக்கள் மீது கரிசனம் காட்டுபவர்கள், தாங்கள் வைத்துள்ள பணத்தில் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானது போக மீதியை இந்த ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் போட்டால் ஏழை மக்களின் வேதனை, துயரம் போக்க உதவிகரமாக இருக்கும். அறிக்கை விடுவதை விட்டு விட்டு, பொதுவெளியில் வந்து ஏழை எளிய மக்களின் கண்ணீர் துடைக்க உதவுங்கள். நாட்டு மக்களின் பிரச்னைகளை சரி செய்ய மோடி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கறுப்புப் பணத்தை ஒழிப்பற்கு மோடி எடுத்துள்ள நடவடிக்கையை நாட்டு மக்கள் மனதாரப் பாராட்டுகிறார்கள். கறுப்புப் பணம் வைத்துள்ளோருக்கு கிலி ஏற்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்..