கூட்டம் கூட்டமாகத் துப்பாக்கிச் சுடக் கற்றுக்கொள்ளும் போலந்து பெண்கள்… பகீர் காரணம்!

  • IndiaGlitz, [Saturday,March 26 2022]

ரஷ்யா, உக்ரைன் நாட்டைத் தொடர்ந்து அதன் அண்டை நாடான போலந்தைத் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அந்நாட்டுப் பெண்கள் தங்களது கைகளில் ஏகே-47 துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது. பார்ப்பதற்கே அச்சமூட்டும் இந்தக் காட்சிகள்தான் தற்போது உலகம் முழுக்க பேசுபொருளாகி இருக்கிறது.

நேட்டா அமைப்பில் இணைய விரும்பிய உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. ஒரு மாதத்தைக் கடந்தும் இந்தத் தாக்குதல் முற்றுப்பெறாத நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாகக் செயல்பட்ட போலந்து நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் போலந்து நாட்டில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களது சொந்தப் பாதுகாப்பிற்காக இப்போதே துப்பாக்கிச் சுடும் பயிற்சியை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

உக்ரைனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களது படைகளை போலந்து நாட்டின் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கின்றன. மேலும் போலந்து நாட்டின் சில படைகள் உக்ரைனுக்கு ஆதரவாக உக்ரைன் நாட்டிற்குள் சென்று போரில் செயல்பட்டு வருகின்றனர். இதற்காகத்தான் ரஷ்யா போலந்து மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இதைத் தொடர்ந்து போலந்து நாட்டின் தலைநகரான வார்சா அருகேயுள்ள ஸ்டிலெனிகா வார்சாவியன்ச் எனும் பகுதியில் கூட்டம் கூட்டமாகப் பெண்கள் கூடி துப்பாக்கிச் சுடும் பயிற்சியை எடுத்துக் கொண்டு வருகின்றனர். தங்களுடைய குழந்தைகள் மற்றும் சொந்தப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போலந்து பெண்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சியைப் பார்த்து உலக நாடுகளே வியப்பை வெளியிட்டு வருகின்றன. இதனால் போலந்து நாட்டின் ஆயுதம் குறித்த சட்டமுறைகள் மாற்றியமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.