ரெய்டுக்குப் போன போலீஸ்… வீடு புகுந்து கொள்ளை? பொதுமக்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Thursday,June 10 2021]

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து சில காவலர்கள் அங்கு ரெய்டுக்கு சென்றுள்ளனர். அப்படி சென்ற காவலர்கள் மலை கிராமத்தில் இருந்த வீடுகளில் புகுந்து 8.5 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளைக் கொள்ளை அடித்துவிட்டதாகவும் இவர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு அடுத்த நச்சுமேடு மலைக் கிராமத்தில் முறைகேடான சம்பவங்கள் நடைபெறுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அரியூர் காவல் நிலையத்தில் இருந்து உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் 4 காவலர்கள் ரெய்டுக்கு சென்றதாகவும் அங்கு சென்றபோது அங்கிருந்த வீடுகளில் யாரும் இல்லாததால் போலீசாரே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் இதுகுறித்து கூறும் நச்சுமேடு கிராம மக்கள் யாரும் இல்லாத வீடுகளில் போலீசார் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து 8.5 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் நகையைக் கொள்ளை அடித்து விட்டதாகவும் அவர்களை மடக்கிப் பிடித்த கிராம மக்கள் தங்களது பணத்தை மீட்டதாகவும் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன், உடன் இருந்த இளையராஜா, யுவராஜ் ஆகியோர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தை குறித்து உதவி கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களைக் காக்க வேண்டிய காவலர்களே இப்படி செய்யலாமா எனப் பலரும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.