மணிகண்டனை கைது செய்ய, மதுரை விரைந்த தனிப்படை போலீசார்.....!
- IndiaGlitz, [Friday,June 18 2021]
மாஜி அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானதை தொடர்ந்து, அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் மதுரை விரைந்துள்ளனர்.
நடிகை சாந்தினியை திருமணம் செய்துகொள்வதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதனால் நடிகை கருவுற்ற நிலையில், தொடர்ந்து மூன்று முறை சட்டவிரோதமான முறையில் கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர். அமைச்சருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கட்சி கூட்டங்களுக்கு செல்லும்போது சாந்தினியைத்தான் தன்னுடைய மனைவி என்றும் எல்லோரிடமும் அறிமுகம் செய்துள்ளார். இந்தநிலையில் நடிகை, அமைச்சரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால், உன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மணிகண்டன் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தினி அடையார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மணிகண்டனிடம் இதுகுறித்து கேட்டபோது, இவர்கள் பணம் பறிக்கும் கும்பல் எனக்கூறிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இந்த வழக்கில் முன்ஜாமீன் வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்ய, அந்தவழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதி அப்துல்குத்தூஸ் தலைமையில் விசாரணைக்கு வந்தது. மணிகண்டன் சார்பாக வாதிட்ட வக்கீல் கூறியிருப்பதாவது, அமைச்சர் திருமணமானவர் என்று தெரிந்து பழகியுள்ளார் சாந்தினி. அவரை காயப்படுத்தியதற்கான ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. இவர்கள் பழகிய மூன்று மாதங்களிலே கருக்கலைப்பு செய்தார்கள் என்று கூறுவது தவறானது. ஏப்ரல் 15-ஆம் தேதி வரை சாந்தினி, மணிகண்டன் சேர்ந்து வசித்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்களும் இல்லை. அவர் குற்றவாளியாக இருந்தால், காவல் அதிகாரிகள் கைது செய்யட்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும், மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வக்கீல் வாதிட்டார். மூன்று முறை கருக்கலைப்பு செய்ததற்கான ஆதாரங்களை திரட்ட வேண்டும் என்பதால், மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது எனவும், அப்படி வழங்கினால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் எனவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டது.
இதையடுத்து சாந்தினி தரப்பு வக்கீல் கூறியிருப்பதாவது, திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியதால் தான், சாந்தினி உறவுக்கு ஒப்புக்கொண்டுள்ளார். 'திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால், உறவுக்கு அளித்த ஒப்புதலை ஒப்புதலாக கருத வேண்டாம்' என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டினார் வழக்கறிஞர். இதனால் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் அடையார் மகளிர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து மணிகண்டனை தேடி வந்துள்ளனர். இவர் மதுரையில் இருப்பதாக காவல்துறைக்கு செய்திகள் வந்ததை தொடர்ந்து, தனிப்படை காவல் துறையினர் மணிகண்டனை கைது செய்ய மதுரை விரைந்துள்ளனர்.