கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்திற்கு அனுமதி மறுப்பு: காவல்துறை கூறிய காரணம்!
- IndiaGlitz, [Friday,October 29 2021]
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்புக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் அக்டோபர் 27 மற்றும் 28 தேதிகளில் படப்பிடிப்பு நடத்தவும் அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கான முன் வேலைகள் நடத்தவும் அனுமதி கோரி கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் சென்னை காவல் துறைக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது.
ஆனால் இந்த விண்ணப்பத்திற்கு அனுமதி மறுத்து காவல் துறை கடிதம் அனுப்பி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக சென்னை எழும்பூர் காவல்துறை அருங்காட்சியத்தில் எந்தவித படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை என்று கூறி ‘விக்ரம்’ படத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ‘விக்ரம்’ படக்குழுவினர் மாற்று இடத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.