கத்தியை காட்டி மிரட்டியவருக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த காவல்துறை அதிகாரி

  • IndiaGlitz, [Saturday,July 01 2017]

கதிராமங்கலம் கிராமத்தில் அமைதியாக போராடிய கிராமத்து மக்களை அடித்து விரட்டிய காவல்துறையினர் ஒருபக்கம் இருக்கும் நிலையில் தன்னை கத்தியால் குத்த வந்த ஒருவரை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தி அவருக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் உணவும் வாங்கிக்கொடுத்த ஹாங்காங் காவல்துறை அதிகாரி ஒருவரின் நெகிழ வைக்கும் உதவி குறித்த செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

ஹாங்காங்கில் உள்ள Huay Kwang என்ற போலீஸ் ஸ்டேசனில் மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்து ஒரு பெரிய கத்தியை கையில் வைத்து கொண்டு அங்கிருந்த ஒரு காவல்துறை அதிகாரியை மிரட்டியுள்ளார். ஆனால் பதிலுக்கு அந்த காவல்துறை அதிகாரி பயப்படாமல், நிதானமாக அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரிடம் அந்த கத்தியை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறினார். அவருடைய கனிவான பேச்சுக்கு மயங்கிய அந்த மர்ம நபர் கத்தியை அவரிடம் ஒப்படைத்தார்.

பின்னர் அந்த மனிதரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். மேலும் அந்த அதிகாரி அவரிடம் கனிவுடன் அவருடைய குறைகளை கேட்டறிந்தபோது அவர் ஒரு இசைப்பிரியர் என்றும், கடந்த மூன்று நாட்களாக செக்யூரிட்டியாக வேலை செய்தும், சம்பளம் கிடைக்காமல் கஷ்டப்படுவதையும் அறிந்து கொண்டார். மேலும் தனது உயிருக்குயிரான கிட்டார் சமீபத்தில் திருடுபோய்விட்டதாகவும் அதிலிருந்து அவர் மனத்தடுமாற்றத்தில் இருப்பதாகவும் தெரியவந்தது.

இதன்பின்னர் அந்த காவல்துறை அதிகாரி, தான் ஒரு கிட்டார் அவருக்கு வாங்கி கொடுப்பதாக சமாதானப்படுத்தியதோடு, அவரை மதிய உணவுக்கும் உடன் அழைத்து சென்றார். மேலும் அவருடைய மனநிலையை சரிசெய்ய அவருக்கு சிகிச்சை அளிக்கவும் அந்த காவல்துறை அதிகாரி உதவி செய்துள்ளார். உலகில் உள்ள அனைத்து காவல்துறையினர்களும் இவரிடம் உள்ள மனிதத்தன்மையை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.