அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து ஹீரோ ஆன போலீஸ் அதிகாரி
- IndiaGlitz, [Tuesday,August 21 2018]
மருத்துவமனையில் யாராலும் கவனிக்கப்படாமல் அழுது கொண்டிருந்த குழந்தை ஒன்றுக்கு அங்கு பணிபுரிந்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தாய்ப்பால் கொடுத்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாகி, அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி செலஸ்டி அயலா என்பவர் கடந்த 14ஆம் தேதி மருத்துவமனை ஒன்றின் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது ஒரு குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது. அங்கிருந்த டாக்டர்களும் நர்ஸ்களும் அவரவர் பணியில் பிசியாக இருந்தனர். அப்போது அயலா, மருத்துவரின் அனுமதி பெற்று அந்த குழந்தைக்கு சற்றும் யோசிக்காமல் தாய்ப்பால் கொடுத்தார்.
இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலானது. ஒருசில மணி நேரத்தில் இந்த புகைப்படத்திற்கு 68 ஆயிரம் லைக்குகள், 94 ஆயிரம் ஷேர்கள் மற்றும் 300 கமெண்ட்டுக்கள் பதிவானது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி அயலா கூறியபோது, 'அந்த குழந்தை அழுத கொண்டிருந்தபோது பசியால் தான் அழுகிறது என்பதை கண்டுகொண்டேன். உடனே அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அருகிலிருந்த மருத்துவர் ஒருவரிடம் அனுமதி பெற்று தாய்ப்பால் கொடுத்தேன். தாய்ப்பால் கொடுத்ததும் அந்த குழந்தையும் அழுகையை நிறுத்திவிட்டது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து இவ்வளவு பெரிய பாராட்டுக்கள் கிடைக்கும் என்று நினைத்தே பார்க்கவில்லை' என்று கூறினார்.