பெற்றோரே முதல் குற்றவாளி: ஒரு போலீஸ் அதிகாரியின் பயனுள்ள வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,January 29 2020]

சென்னையில் நேற்று நடந்த விபத்து ஒன்றில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் சிக்கினர். இந்த விபத்தில் ஒருவர் மரணம் அடைந்தார், இன்னொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இரண்டு இளைஞர்களின் பெற்றோர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் எந்த பெற்றோரின் மகன் மரணம் அடைந்தார் என்று தெரியாமல் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி ’17 வயது உள்ள சிறுவனுக்கு 350 சிசி இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுத்து ஓட்டச் சொல்லி பெற்றோர்களே முதல் குற்றவாளி என்றும் அந்த வயதில் 50 கிலோ எடையுள்ள ஒரு சிறுவன் எவ்வாறு அவ்வளவு எடையுள்ள ஒரு வண்டியை ஓட்ட முடியும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டாமா? என்று கூறியுள்ளார்.

மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வண்டி ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் உட்கார்ந்து இருப்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் போட வேண்டும் என்றும் பின்னால் உட்கார்ந்து இருப்பவருக்கே தலையில் அடிபட அதிக வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஹெல்மெட் போட வேண்டும் என்பதற்காக பிளாட்பார கடைகளில் விற்கும் தரம் குறைந்த ஹெல்மெட்டுகளை போடக்கூடாது என்றும் நல்ல தரமான, தலைக்கு பொருந்தக் கூடிய அளவிலான சரியான ஹெல்மெட்டை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார். போலீஸ் அதிகாரியின் இந்த பயனுள்ள அறிவுரையை அனைவரும் பின்பற்ற பின்பற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.