மருத்துவக்கல்லூரி மாணவி போல் வேடமிட்ட பெண் போலீஸ்.. சினிமாவை மிஞ்சும் பரபரப்பு சம்பவம்
- IndiaGlitz, [Tuesday,December 13 2022]
பெண் போலீஸ் ஒருவர் மருத்துவ கல்லூரி மாணவி போல் வேடமிட்டு மருத்துவ கல்லூரிக்கு சென்று ராக்கிங் செய்தவர்களை கண்டுபிடித்த சம்பவம் பெரும் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மிக மோசமாக ராகிங் நடப்பதாகவும் குறிப்பாக மாணவிகள் சீனியர் மாணவர்களால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருவதாகவும் புகார் வந்தது.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராக்கிங் செய்தது யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக விசாரணை செய்தனர். ஆனால் நான்கு மாதங்கள் ஆகியும் ராகிங் செய்தவர்கள் யார் என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை.
இதனையடுத்து காவல்துறையினர் அதிரடியாக இரண்டு பெண் போலிஸ் மற்றும் 3 காவலர்களை மருத்துவ கல்லூரிக்கு பல்வேறு வேடங்களில் அனுப்பினார்கள். அதில் ஷாலினி என்ற பெண் போலீஸ் மருத்துவ கல்லூரி மாணவியாக மருத்துவ கல்லூரிக்குள் சென்றார். ஒரு பெண் போலீஸ் நர்சு போலவும் இரண்டு காவலர்கள் கேண்டீன் ஊழியர்கள் போலவும் கல்லூரிகளுக்கு சென்றனர்.
அங்கு சென்ற பெண் போலீஸ் ஷாலினி அங்கு உள்ள மாணவர்களுடன் பழகி ராக்கிங் குறித்த அனைத்து விவரங்களையும் திரட்டினார். அது மட்டுமன்றி அவர்களுக்கு செவிலியராக மற்றும் உணவு கேண்டீன் ஊழியர்களாக நடித்த காவலர்களும் உதவி செய்தனர்.
இதனை அடுத்து பெண் போலீஸ் ஷாலினி ராக்கிங்கில் சம்பந்தப்பட்ட 11 மாணவர்களை கண்டுபிடித்து அவர்கள் குறித்த முழு விவரங்களையும் காவல்துறைக்கு அளித்தார். இதனையடுத்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு அந்த ஆதாரங்கள் அனைத்தும் அளிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு மருத்துவக் கல்லூரி மாணவி போல் வேடமிட்டு ராக்கிங் செய்தவர்களை கண்டுபிடித்த பெண் போலீசுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.