கல்லறையில் மயங்கிய இளைஞரை தோளில் சுமந்து காப்பாற்றிய பெண் காவலர்!

  • IndiaGlitz, [Thursday,November 11 2021]

கடும்மழைக்கு நடுவே சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையொன்றில் இளைஞர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த இளைஞரை தன்னுடைய தோளில் சுமந்து மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. அதிலும் சென்னையில் கனத்த மழை மற்றும் காற்றுடன் மழைபெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் வேலைப்பார்த்து வந்த இளைஞர் உதயா மழையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கல்லறை தோட்டத்திலேயே மயங்கி கிடந்துள்ளார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் மரம் முறிந்து உதயா இறந்து விட்டதாகக் காவல் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த இளைஞர் உயிருடன் இருப்பதை அறிந்து, உடனே தன்னுடைய அந்த இளைஞரை தோளில் சுமந்துள்ளார். பின்னர் ஒரு ஆட்டோவில் ஏற்றி சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார். இந்தச் சம்பவம் பலரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.