ஐதராபாத் என்கவுண்டரில் இறந்த குற்றவாளிகளின் பிணங்களுக்கு வாரம் ஒருமுறை ஊசி!
- IndiaGlitz, [Saturday,December 14 2019]
சமீபத்தில் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் நான்கு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகள் நால்வரையும் கண்டுபிடித்த போலீசார் அவர்களிடம் ஒரு வாரம் விசாரணை செய்தனர். அதன்பின் குற்றவாளிகள் நால்வரும் தப்பி செல்ல முயன்றதை அடுத்து என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.
போலீசாரக்ளின் இந்த என்கவுண்டர் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வந்தனர். ஆனால் ஒரு சிலர் இந்த நடவடிக்கையை இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்றும் எச்சரிக்கின்றனர்
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று ஐதராபாத் ஐகோர்ட்டில் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது என்கவுண்டர் செய்யப்பட்ட 4 குற்றவாளிகளில் உடல்களையும் மறு உத்தரவு வரும்வரை பதப்படுத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்
இதனையடுத்து பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகளின் சடலத்தை உயர்நீதிமன்ற உத்தரவு வரும் வரை பாதுகாப்பதற்காக வாரம் ஒருமுறை 7,500 ரூபாய் மதிப்புள்ள ஊசியை செலுத்தி பதப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி அந்த நான்கு பிணங்களை விசேஷ ஊசியை பதப்படுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது