சீட் பெல்ட் அணியாததால் அபராதம்: இருசக்கர வாகன ஓட்டி அதிர்ச்சி

  • IndiaGlitz, [Thursday,September 26 2019]

நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வில்லை என்றும் கூறி, அபராதம் வசூலிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரிடம் சீட் பெல்ட் அணிய வில்லை என அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபிரபு என்பவர் சமீபத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையில் சோதனை செய்து கொண்டிருந்த காவல்துறையினர் ராஜபிரபுவை வழிமறித்து அவர் ஹெல்மெட் அணியாததால் அபராதம் வசூலித்து அதற்கு உரிய ரசீதையும் வழங்கினர். அபராத பணத்தை கொடுத்து ரசீதை பெற்று கொண்ட ராஜபிரபு, ரசீதில் உரிய காரணத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

அவருக்கு சீட் பெல்ட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டதாக அந்த ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது பணிச்சுமை காரணமாக தலைக்கவசம் அணியவில்லை என்ற காரணத்திற்கு பதிலாக சீட் பெல்ட் அணியவில்லை என மாற்றி பதிவு செய்யப்பட்டதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த ரசீது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.