பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்வாதிகாரி டாஸ்க்: கமல் மீது போலீஸ் புகார்

  • IndiaGlitz, [Friday,August 03 2018]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களின் ஆதரவை பெற முடியாமல் திணறி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் இடம்பெற்ற சர்வாதிகாரி டாஸ்க்கால் பார்வையாளர்களின் உச்சகட்ட வெறுப்புக்கு உள்ளானது

இந்த நிலையில் இந்த சர்வாதிகார டாஸ்க், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த லூயிசாள் ரமேஷ் என்ற வழக்கறிஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ‘'நான் 27 ஆண்டுகாலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். தற்போது பலரும் அரசியல் கட்சி ஆரம்பித்து வருகின்றனர். ஆட்சியைப் பிடிக்க நாங்கள் இவ்வாறு செயல்படுவோம் என்பதற்குப் பதில் அவதூறு செய்வதுதான் அதிகமாக இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் வாரந்தோறும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்க்க கட்சி சம்பந்தமாக நிகழ்ச்சியில் பேசுகிறார். ஆனால் இது அவரது கட்சியை வளர்க்க அவர் எடுத்துள்ள யுக்தி.

ஆனால் அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக கொச்சைப்படுத்தி வருகிறார். தற்போது இவருடைய ஏற்பாட்டில் சர்வாதிகாரி என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஐஸ்வர்யா என்பவர் பெண் சர்வாதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் பொதுமக்களைக் கொடுமைப்படுத்தும் பல்வேறு செயல்களைச் செய்கிறார்.

இந்த டாஸ்க்கில் என்னென்ன பேச வேண்டும், செய்ய வேண்டும் என கமல்ஹாசனும், தனியார் நிறுவனமும் முடிவு செய்கின்றனர். அதன்படிதான் அவர்கள் பேசுகின்றனர் நடிக்கின்றனர். இதில் ரித்விகா என்பவர் பேசும்போது ஐஸ்வர்யா வட மாநிலப் பெண் அவருக்கு தமிழ்நாட்டில் சர்வாதிகாரி ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாது என்று பேசுகிறார்.

இந்த டாஸ்க் முடிந்தவுடன் வருகிற சனிக்கிழமை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும்போது தமிழகத்தில் சர்வாதிகாரி போல் ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது போல் பேசுவார். எனவே தமிழகத்தில் அமைதிப் பூங்காவாக ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அவதூறாக சர்வாதிகாரி போல் சித்தரிக்கும் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிறுவனம் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” .

இவ்வாறு ரமேஷ் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.