பாத்ரூமில் வழுக்கி விழும் பட்டாக்கத்தி பைரவர்கள்
- IndiaGlitz, [Thursday,July 25 2019]
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றின் மாணவர்கள் இருவர் பட்டா கத்தியுடன் ஒரு அரசு பேருந்தில் ஏறி அங்கிருந்த சக மாணவர் ஒருவரை சரமாரியாக வெட்டிய சிசிடிவி காட்சி சமூக இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த திடுக்கிடும் சம்பவத்தை அடுத்து குறிப்பிட்ட இரண்டு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் இந்த இரண்டு மாணவர்களின் கைகள் கட்டுபோட்டவாறு உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரண்டு மாணவர்களும் பாத்ரூமில் தவறி விழுந்ததால் ஏற்பட்ட காயம் இது என்று போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனை நம்ப பொதுமக்கள் தயாராக இல்லை. காவல்துறையினர்களே இந்த 2 மாணவர்களுக்கும் தண்டனை அளித்ததாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது
போலீசாரிடம் சிக்கிய பட்டாக்கத்தி பைரவர்கள் அடுத்த நாளே கையில் கட்டுடன் இருப்பது இது புதிதல்ல. இதற்கு முன்னரும் பெண்களிடம் சங்கிலி அறுத்த திருடர்கள், காவல்துறை அதிகாரிகளிடம் கடும் மோதலில் ஈடுபட்டவர்கள், நள்ளிரவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சில திருடர்கள் ஆகியோர்கள் மறுநாள் கையில் கட்டுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இது சட்டப்படி தவறு என்றாலும் பொதுமக்களிடமிருந்து இதற்கு எந்தவித எதிர்ப்பும் ஏற்படவில்லை. மாறாக இதுபோன்ற குற்றவாளிகளை மனித உரிமை மீறல் என்ற லிஸ்டில் சேர்க்க கூடாது என்றும் இதைவிடக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்
மக்கள் பார்வையில் இது சரியானதாக இருந்தாலும் சட்டப்படி இது தவறு என்றும் எந்த குற்றம் செய்து இருந்தாலும் அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்