கோழிகளுக்கு கொரோனா??? வதந்தி பரப்பிய ஒருவர் கைது...
- IndiaGlitz, [Wednesday,March 11 2020]
பண்ணை கோழிகளுக்கு கொரோனா பரவியதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பியவர் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார். கொரோனா அச்சத்தால் இறைச்சியின் விற்பனை தமிழகத்தில் கடும் சரிவினைச் சந்தித்து இருக்கிறது. இந்நிலையில் கோழிகளுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பிய ஒருவர் கைது செய்யப் பட்டு உள்ளார்.
பிப்ரவரி மாதம் முதலே நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள பண்ணைக் கோழிகளுக்கு கொரோனா பரவி இருப்பதாக வாட்ஸ்-அப்பில் பல வதந்திகள் உலா வந்து கொண்டிருந்தன. இதையடுத்து சேலம் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் கறிகோழிகளின் விற்பனை கடும் சரிவை சந்தித்தது. எனவே வதந்தி பரப்பி வருவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முட்டை மற்றும் கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் காவல் துறையினரிடம் முறையிட்டது.
இதன் அடிப்படையில் நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரைத் கைது செய்தனர். விசாரணையில் பெரியசாமி அவருடைய வாட்ஸ்-அப் எண்ணிலிருந்து இதுபோன்ற வதந்திகளை பரப்பியது தெரிய வந்திருக்கிறது.
இதற்கு முன்னதாக கோழிக்கறி மற்றும் இறைச்சி சாப்பிட்டால் கொரோனா பரவும் என்ற வதந்தி ஆந்திராவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது. விற்பனை சரிவினை சமன்படுத்த கடைக்காரர்கள் பல சலுகைகளையும் அறிவித்தனர். ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு கடைக்காரர் 5 கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் ஒரு ஹெல்மெட் இலவசமாக வழங்கினார் என்பதும் குறிப்பிடத் தக்கது.