அரசுடைமை ஆகுமா ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம்?
- IndiaGlitz, [Thursday,June 01 2017]
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர்களும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதோடு, ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், சசிகலா உள்பட மூவருக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதை உறுதி செய்தது. ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட காரணத்தால் அவர் தண்டனையில் இருந்து தப்பினாலும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் செலுத்தப்பட வேண்டும் என்பது நீதிமன்றத்தின் உத்தரவு
இந்நிலையில் அபராதம் செலுத்துவதற்கு வசதியாக ஜெயலலிதா, சசிகலா பெயரில் உள்ள 68 சொத்துகளை பறிமுதல் செய்து அரசுடமை ஆக்கும்படி நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு உரிய சொத்துகளை கையகப்படுத்த சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகளை, தனி அதிகாரிகளாக நியமனம் செய்து 68 சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
ஆனால் இந்த 68 சொத்துக்களில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு இல்லை. இந்த சொத்துக்கு ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகிய இருவர் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். இருப்பினும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருவதால் தமிழக அரசு போயஸ் கார்டன் இல்லத்தை சட்டரீதியில் கைப்பற்றி நினைவு இல்லமாக மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சட்ட நிபுணர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாகவும், வாரிசு பிரச்சனையை தவிர்த்து போயஸ்கார்டன் வீட்டை அரசுடமையாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிட அரசு தயாராகி வருவதாகவும் தமிழக அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது