Download App

Podhu Nalan Karudhi Review

'பொதுநலன் கருதி' : கந்துவட்டி கோஷ்டிகளின் மோதல்

சென்னையின் பெரும் பகுதிகளை தங்களது கையில் வைத்திருக்கும் இரண்டு கந்துவட்டி கோஷ்டிகளுக்குள் ஏற்படும் மோதல், அதனால் ஏற்படும் விளைவுகள், இழப்புகள், கந்துவட்டியால் சிக்கிய மிடில்கிளாஸ் குடும்பங்களின் கதி ஆகியவைதான் இந்த படத்தின் கதை

இரண்டு வருடங்களாக காணாமல் போன அண்ணனை தேடும் கருணாகரன், இடையிடையே எப்போது எரிந்து விழும், எப்போது அன்பாக இருக்கும் என்று தெரியாத ஒரு பெண்ணுடன் காதல் என ஒரு பக்கமும், பாளையங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பிழைக்க வந்து தாழ்வு மனப்பான்மையுடன் உள்ள ஆதித், அவரை காதலிக்கும் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத பெண் ஒரு பக்கமும், உத்ரா என்ற கந்துவட்டி கொடூரனுக்கு வலது கையாக இருந்து இரக்கமின்றி அடாவடியாக பணம் வசூல் செய்து தரும் கையாளாகவும், அந்த வேலையால் காதலியை இழக்கும் சந்தோஷ் ஒரு பக்கமும், உத்ராவிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கி கொடுக்க முடியாததால் அவமானம் அடைந்த ஒருவன் உத்ராவிடமே வேலைக்கு சேர்ந்து அவனை போட்டு தள்ள முயற்சிப்பது ஒரு பக்கமும் என நான்கு கோணங்களில் கதை நகர்கிறது. இந்த நான்கு கேரக்டர்களின் முடிவு என்ன என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை

கருணாகரன், சந்தோஷ், ஆதித் உள்பட நான்கு முக்கிய கேரக்டர்களும், அவர்களின் காதலிகளான அனு சித்ரா, சுபிக்சா, லீஷா ஆகிய மூன்று நாயகிகளின் நடிப்பும் மிகையில்லாமல் இருப்பதால் ரசிக்க முடிகிறது. குறிப்பாக கருணாகரனின் நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது. ஆனாலும் கருணாகரன் தவிர மற்ற முகங்களை அதிகம் பார்த்திராத காரணத்தால் மனதில் பதிய கொஞ்சம் நேரம் எடுக்கின்றது. கருணாகரனின் கையாளாகத்தனம், சந்தோஷின் ஆக்ரோஷம், ஆதித்தின் அப்பாவித்தனம் நன்றாக படமாக்கப்பட்டுள்ளது என்பது இந்த படத்தின் பிளஸ்களில் ஒன்று.

ஹரிகணேஷின் இசையமைப்பில் பின்னணி அருமை. பாடல்களும் ஓகே ரகம். சுவாமிநாதனின் கேமிரா, கிரேசானின் படத்தொகுப்பில் குறையில்லை. 

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்த சம்பவத்தின் பாதிப்பில் இந்த படத்தை இயக்கியுள்ள சீயோன், கந்துவட்டியால் பாதிக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினர்களின் நிலையை மனதில் பதியும்படி கூறியுள்ளார். இரக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கந்துவட்டி வசூல் செய்பவர்களின் அராஜகங்களையும் தைரியமாக பதிவு செய்துள்ளார்.

இரண்டு கந்துவட்டி கோஷ்டிகளின் மோதலும் சரியாக கையாளப்பட்டுள்ளது. குறிப்பாக உத்ரா கேரக்டரில் நடித்துள்ள யோக் ஜேபி கேரக்டர் மூலம் பல கந்துவட்டிக்காரர்களின் முகத்திரையை கிழித்துள்ளார். ஆனால் முற்றிலும் பிரபலம் இல்லாத நட்சத்திரங்களை வைத்து ஒரே நேர்கோட்டில் கதை சொல்லாமல் திடீர் திடீரென சின்ன சின்ன பிளாஷ்பேக்குகளுடன் கதை நகர்வது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையை நகர்த்தி சென்ற இயக்குனர் சீயோனுக்கு பாராட்டுக்கள்

மொத்தத்தில் இயக்குனரின் வித்தியாசமான கதை சொல்லும் நேர்த்திக்காக இந்த படத்தை பார்க்கலாம்

Rating : 2.5 / 5.0