தவறான மனிதர்களை அடையாளம் காட்டிய காலச்சூழல்: ரஜினி குறித்து பாமக ராமதாஸ்
- IndiaGlitz, [Thursday,May 31 2018]
நேற்று தூத்துகுடி சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் எதற்கெடுத்தாலும் போராட வேண்டாம் என்றும், போராடும்போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், போராட்டத்தின் இடையே சமூக விரோதிகள் ஊடுருவினால் அது கலவரமாக வெடிக்கும் என்றும் கூறினார். ஆனால் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ரஜினி கூறியதை 'அவர் போராட்டமே கூடாது என்று கூறியதாகவும், போராட்டம் செய்த அனைவருமே சமூக விரோதிகள் என்று கூறியதாகவும் திரித்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில் பாமக தலைவர் ராமதாஸ் இன்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'தமிழகத்தில் போராட்டங்களே கூடாது. போராட்டங்களை ஜெயலலிதா போல இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியது பாசிசத்தின் உச்சம். தவறான மனிதர்களை சரியான நேரத்தில் அடையாளம் காட்டியதற்காக காலச்சூழலுக்கு தமிழக மக்கள் நன்றி கூற வேண்டும்! என்று கூறியுள்ளார்.
வழக்கம்போல் ராம்தாஸ் அவர்களின் இந்த டுவீட்டுக்கும் நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். போராட்டம் என்ற பெயரில் சமீபத்தில் பாமகவின் காடுவெட்டி குரு மரணம் அடைந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது குறித்தும் டுவிட்டர் பயனாளிகள் சுட்டிக்காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.