'சர்கார்' படத்திற்கு பாமகவும் எதிர்ப்பு: ஆனால்..வேற காரணம்!

  • IndiaGlitz, [Thursday,November 08 2018]

விஜய் நடித்த 'சர்கார்' படத்தை திமுக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டன. இந்த நிலையில் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் சர்கார் படத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். ஆனால் இவர் இந்த படத்தை எதிர்க்க காரணம் புதிது. அதாவது இந்த படத்தில் விஜய் சுமார் 5 தருணங்களில் மொத்தம் 22 முறை புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் சர்கார் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சி வரை சுமார் 5 தருணங்களில் மொத்தம் 22 முறை புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இப்படத்தின் கதைக்கும், காட்சி அமைப்புகளுக்கும் எந்த இடத்திலும் புகைப்பிடிக்கும் காட்சிகள் தேவையில்லை என்றும், அவற்றையெல்லாம் விட அபத்தமாக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திலும் அனைவர் மத்தியிலும் விஜய் அப்பட்டமாக புகைப் பிடிக்கிறார் என்றும், இந்த காட்சிகள் படத்தில் வலிந்து திணிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒருவரின் வாக்கை இன்னொருவர் பதிவு செய்ததை எதிர்த்து போராடும் அளவுக்கு அரசியல் பொறுப்பு உள்ள சர்கார் நாயகனுக்கு, இளைய தலைமுறையை கெடுக்கும் வகையில் புகைப் பிடிக்கும் காட்சிகளை வைக்கக் கூடாது என்ற சமூகப் பொறுப்பு இருக்க வேண்டாமா? அத்தகைய பொறுப்பில்லாமல் குழந்தைகளை கூட கெடுக்கும் வகையில் புகைக்கும் காட்சிகளை திணித்திருப்பதை பார்க்கும் போது, சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாசும், நடிகர் விஜய்யும் செய்திருப்பது ஒரு விரல் புரட்சி அல்ல...இரு விரல் மோசடித்தனம் தான் என்பதை உணர முடியும் என்றும் ராமதாஸ் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே சர்கார் திரைப்படக்குழுவினரும், தயாரிப்பு நிறுவனமும் பொறுப்பை உணர்ந்து நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.