விட்டுக்கொடுத்து வாழுங்கள்: 'இந்தியன் 2' நடிகைக்கு திருமண வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!
- IndiaGlitz, [Thursday,February 22 2024]
கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகைக்கு நேற்று திருமணம் நடந்த நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவருக்கும் ஜாக்கி பக்னானி என்பவருக்கும் நேற்று கோவாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கும் ரகுல் பிரீத் சிங் திருமண அழைப்பிதழ் அனுப்பி இருந்த நிலையில் அவர் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் இனிய பயணத்தை தொடங்கும் ஜாக்கி பக்னானி - ரகுல் ப்ரீத் சிங் தம்பதிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்வரும் காலங்களில் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு மனமும், செயலும் ஒன்றாகவே இருக்கும் வகையில் வாழ வேண்டும்.
அனைத்து சூழ்நிலைகளிலும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, கனவுகள், ஆசைகளை நனவாக்கும் தேடலில் ஒருவர் கைகளை மற்றொருவர் பற்றிக்கொண்டு, அன்புடன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, குறைகளை ஆமோதித்து, நல்லனவற்றை கற்றுக்கொள்ளும் பயணமாக அமையும் வகையில் வாழ்ந்து காட்ட வேண்டும்.
உங்கள் திருமணத்திற்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி. இந்த முக்கியமான நாளில் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.