இந்தியாவில் உலகிலேயே நீளமான சுரங்கப்பாதை… இன்று பயன்பாட்டுக்கு வருகிறதா???

  • IndiaGlitz, [Saturday,October 03 2020]

பனிக்காலங்களில் இமாச்சல் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் 6 மாதத்திற்கு தொடர்ந்து பனிப்பொழிவு இருக்கும். அத்தகைய நேரங்களில் போக்குவரத்துக் குறைபாடுகள் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அம்மாநிலத்தின் மணாலி எனும் இடத்தில் இருந்து லஹால் ஸ்பிடி எனும் பள்ளத்தாக்கை நோக்கி செல்லும் நெடுஞ்சாலை போக்குவரத்து பனிப்பொழிவு காலங்களில் முற்றிலும் மூடப்படும். காரணம் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு சாலை முழுவதும் மூடிக்கொள்வதால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கமான ஒன்று.

இதனால் மக்கள் கடுமையான சிரமங்களை அனுபவித்த வந்த நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜுன் 3 ஆம் தேதி இப்பகுதியில் புதிய சுரங்கபாதை திட்டத்தை அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்த உலகிலேயே மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதை அமைப்புப்பணி திட்டம் தற்போது முடிவடைந்து இருக்கிறது. அந்தச் சுரங்கப் பாதையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.

இந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதைத் திட்டத்தின் மூலம் பயணிகள் 46 கி.மீ பயணத்தை மிச்சம் பிடிக்க முடியும். இது 5 மணி நேரப் பயணமாகும். இதைவிட மற்றொரு சிறப்பு மணாலி - லஹால் ஸ்பிடி பகுதிக்கு கடும் பனிப்பொழிவு காலங்களிலும் பயணத்தை மேற்கொள்ளலாம். இதனால் அனைத்து பருவக் காலங்களிலும் மக்கள் இடையூறு இன்றி பயணத்தை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை உலகிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை திட்டமாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. 9.6 கி.மீ தூரம் வரை அமைந்துள்ள இருவழி சுரங்கப்பாதை திட்டம் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் அடல் பிகாரி வாஜ்பாய் இத்திட்டத்தை தொடங்கி வைத்ததால் அவருடைய பெயரே இத்திட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடல் சுரங்கப்பாதை எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சுரங்கப் பாதையை இன்று பிரதமர் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.