லைட்டை ஆஃப் பண்ணிட்டு தீபம் ஏற்றுங்கள்: பிரதமர் மோடி உரை
- IndiaGlitz, [Friday,April 03 2020]
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையிலும் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இந்தியாவில் இதுவரை 2069 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் கொரோனா பாதிப்பு குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாடினார். அவர் அதில் கூறியதாவது:
மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி.
கொரோனா வைரஸுடனான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். இன்று 10-வது நாள். பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். வீட்டில் இருந்தாலும் நாம் ஒவ்வொருவருடனும் 130 கோடி இந்தியர்கள் உள்ளனர். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது. கொரோனா தொடர்பாக இந்தியா எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலகமே உற்று பார்த்து வருகிறது
ஏப்ரல் 5 ஞாயிறன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அணைத்துவிட்டு, பால்கனிக்கு வந்து டார்ச் லைட் அல்லது அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். அல்லது செல்போனில் 9 நிமிடங்கள் வெளிச்சம் ஏற்படுத்தலாம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.