கமல்ஹாசனின் இந்து தீவிரவாத பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்!
- IndiaGlitz, [Wednesday,May 15 2019]
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் பேசினார். கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு அவரது திரையுலகில் இருந்தும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு காரணமாக கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது
மேலும் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கவும், அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் கமல் மீது கரூர் காவல்நிலையத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கமல்ஹாசன் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் பிரதமர் மோடி கமலின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலளித்துள்ளார். அவர் இதுகுறித்து, 'எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது’என்று கூறியுள்ளார். மேலும் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்றும் அப்படி ஒரு தீவிரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.