ஊரடங்கு நேரத்தில் விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்…
- IndiaGlitz, [Friday,May 14 2021]
மத்திய அரசு, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தின் 8 ஆவது தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக விடுவித்தார்.
இதனால் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த ஒவ்வொரு விவசாயிகளுக்கும் 4 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் தவணை தொகை ரூ.2,000 நாளை முதல் வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. அதோடு இத்திட்டத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் பிரதமர் நரேந்திரமோடி 8 ஆவது தவணைத் தொகையாக ரூ.19,000 கோடியை விடுவித்துள்ளார்.
இதன்மூலம் இந்தியாவில் 9.5 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன்பெற உள்ளனர். மேலும் இந்த விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1.15 கோடி நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கினால் தற்போது பெரும்பாலான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த நிதியுதவி அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.