தாதா சாகேப் பால்கே விருது: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முதல்வர்!

  • IndiaGlitz, [Monday,October 25 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் அளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த விருதை தனது குருவான கே.பாலச்சந்தர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக மேடையில் ரஜினிகாந்த் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் அவர்களை தொலைபேசி மூலம் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது

அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் அவர் அதில் கூறி இருப்பதாவது: திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்!
திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!

அதேபோல் தமிழக கவர்னர் கே.என் ரவி அவர்களும் ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய திரைத்துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான மற்றும் வெகு சிலருக்கே கிடைக்கப்பெற்ற அங்கீகாரமானன தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின் சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

இந்நாள் திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது ஒரு பொன்னாள் ஆகும். இந்திய திரையுலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் தங்களது தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்து இழுத்த பண்பாளர் நீங்கள். நீங்கள் நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள் பல நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்