பிரதமர் நிவாரண நிதிக்கு மோடியின் தாயார் கொடுத்த தொகை

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பெரும் மனித உயிரிழப்புகளும் பொருள் இழப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனாவை எதிர்த்து போரிட மத்திய மாநில அரசுகளுக்கு தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டுமென தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் கேட்டுக்கொண்டார்

பிரதமரின் கோரிக்கையை ஏற்று டாடா நிறுவனம் ஆயிரத்து 500 கோடி, ரிலையன்ஸ் நிறுவனம் 500 கோடி மற்றும் பல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடி நிதி உதவி செய்து வருகின்றன. அதுமட்டுமின்றி ஏழை எளிய மக்களும் மாணவர்களும் தங்களுடைய சேமிப்பிலிருந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அவர்கள் தன் சொந்த செலவுக்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து ரூபாய் 25 ஆயிரத்தை பிரதமரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். இந்த தள்ளாத வயதிலும் தன்னுடைய சேமிப்பை பிரதமரின் கொரோனா தடுப்பு நிதியாக வழங்கிய பிரதமரின் தாயாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது