பிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்
- IndiaGlitz, [Sunday,June 07 2020]
பிரதமரின் பெயரைச் சொல்லி தமிழ் நடிகர் ஒருவரை ஏமாற்ற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் ’மான்குட்டி’ என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். இவர் தற்போது காய்கறி கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் நுங்கம்பாக்கம் தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் பிரதமர் மோடி தங்களது அருகில் இருப்பதாகவும், அவருடைய அறிவுறுத்தலின்படி ஏழைகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் 5500 ரூபாய் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாமா? என கேட்டுள்ளார். பணம் செலுத்தலாம் என்று சுரேஷ் கூறியவுடன் அவருடைய வங்கிக்கணக்கின் விபரங்களையும் அந்த நபர் கேட்டுள்ளார். இதனை அடுத்து இது மர்ம நபர்களின் மோசடி செயல் என்பதை புரிந்து கொண்ட சுரேஷ், வங்கிக் கணக்கு விவரங்களை கொடுப்பதற்கு முன்னர் உங்கள் அருகில் இருக்கும் மோடியுடன் நான் பேசலாமா என்று கேட்டுள்ளார்.
தாராளமாக பேசலாம் என கூறிய அந்த மர்ம நபர் அடுத்த நிமிடம் போன் அழைப்பை துண்டித்துள்ளார். இதனை அடுத்து நடிகர் சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ஊரடங்கு காலத்தில் இம்மாதிரியான மோசடிப் பேர்வழிகள் பிரதமர் பெயரை சொல்லி பணம் பறித்து வருகிறார்கள் என்றும் அதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், யாரும் ஏமாந்து விட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பொது மக்களிடம் பிரதமரின் பெயரைச் சொல்லி மோசடிப் பேர்வழிகள் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.