"மக்களே.. வெளிநாட்டு பயணங்களை தவிர்த்துவிட்டு நாட்டிலேயே இருங்கள்"..! பிரதமர் மோடி.
- IndiaGlitz, [Thursday,March 12 2020]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் இதுவரை 123 நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலும் இன்று மஹாராஷ்டிராவில் உறுதிப்படுத்தப்பட்ட 2 பேரோடு சேர்த்து மொத்தம் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அரசானது வைரஸ் பரவாமல் தடுக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறது. கேரளாவில் அதிகமாக 17 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மாநில அரசானது எல்லா திரையரங்குகள் மற்றும் பள்ளி கல்லூரிகளை மூடியுள்ளது. அதே போல் டெல்லி அரசானது திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளை காலவரையறையின்றி மூட சொல்லியுள்ளது.
இந்நிலையில் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,மக்கள் தேவையில்லாமல் அடிக்கடி வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்த்தால் வைரஸ் பரவுவதை தடுக்கலாம் எனவும், இந்திய அரசானது மாநிலங்கள் வாரியாக வைரஸைக் கட்டுப்படுத்த எல்லா நடவடிக்கையும் எடுத்து வருகிறது எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விசாக்கள் நிறுத்திவைப்பு முதல் சுகாதார சேவைகள் அதிகப்படுத்துவது வரை எல்லா வேலைகளையும் அரசு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.