பிளாஸ்மா சிகிச்சை இதற்குமுன் எந்த நோய் சிகிச்சைக்குப் பயனளித்தது??? கொரோனாவில் இது சாத்தியமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிளாஸ்மா சிகிச்சை எந்த அளவிற்கு பயனளிக்கும், அதிலுள்ள சிக்கல்கள் என்ன என்பதைக் குறித்து தற்போது கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையில் இருக்கிறது என்றாலும் மனிதர்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் 18 மாதங்கள் பிடிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு ஒரு முழுதான சிகிச்சையைக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பல நாடுகள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், இன்டர்பிரான், Redmesivir போன்ற மருந்துகளை பயன்படுத்தி வருகின்றன என்றாலும் அதிலும் முழுமையான வெற்றியைப் பெறமுடிவதில்லை. இந்நிலையில் பிளாஸ்மாக சிகிச்சை பலனளிக்குமா என்கிற ரீதியில் பலநாடுகள் முயற்சித்து வருகின்றன.
பிளாஸ்மா சிகிச்சை முறையை, முதன்முதலில் 1800 களின் பிற்பகுதியில் ஜெர்மனை சேர்ந்த உடலியல் நிபுணர் எமில் வான் பெஹ்ரிங் என்பவர் பாக்டீரியா ஏற்படுத்தும் டிப்தீரியா என்ற நோய்த்தொற்றுக்கு எதிராக பயன்படுத்தினார். இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான சிகிச்சை முறையாகக் கருதப்பட்டது. எமில் வான் டிப்தீரியாவால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து எடுக்கப்பட்ட ஆன்டிபாடிகளை கொண்டு நோய்த்தொற்றை கட்டுப்படுத்தி வெற்றிக்கண்டார். அதற்குப்பின்பு 1918 இல் ஸ்பானிஷ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டபோது அந்நோயாளிகளக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், 1934 இல் பென்சில்வேனியாவில் அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டபோது டாக்டர் ஜே. ரோஸ்வெல் கல்லாகர் என்பவர் பிளாஸ்மா சிகிச்சை அளித்து பலரது உயிரைக் காப்பாற்றினார். பிளாஸ்மா சிகிச்சையானது பல நேரங்களில் பாக்டிரீயா ஏற்படுத்தும் நோய்த்தொற்றுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது உலகை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியிருக்கும் கொரோனா என்பது வைரஸ் கிருமி. மற்ற நிமோனியா போன்றில்லாம் இது கடுமையான சுவாசக் கோளாறுகளை தோற்றுவிக்கிறது. இதுவரை உலக நாடுகளில் சிறிய எண்ணிக்கையிலான பிளாஸ்மா சிகிச்சையை மட்டுமே நடத்தியிருக்கின்றன. பெரும் அளவிலான சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பல விஞ்ஞானிகள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். சீனாவில் மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை முறை குறித்த ஆய்விலும் நம்பிக்கைக்குரிய முடிவுகள் பெறப்பட்டன.
அமெரிக்கா, ஈரான், United Kingdom போன்ற நாடுகளும் பிளாஸ்மா சிகிச்சையில் வெற்றிப்பெற்றிருக்கின்றன. இந்தியாவில் இதற்கான முதற்கட்ட முயற்சியில் கேரள மருத்துவர்கள் வெற்றிபெற்றனர். இவை அனைத்தும் சிறிய எண்ணிக்கையிலான முடிவுகள் மட்டுமே என்பதும் கவனத்திற்குரியது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு பன்றி காய்ச்சல், சார்ஸ், மெர்ஸ் போன்ற நோய்களுக்கு எதிராகவும் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்படியிருந்தும் உலகச் சுகாதார அமைப்பு, பிளாஸ்மா (Convalescent Plasma theraphy) ஐ கொரோனாவுக் எதிரான மருத்துவ முறையாக அறிவிக்கவில்லை. கொரோனாவுக்கு மட்டுமல்ல எந்த வைரஸ் தொற்றுக்கும் பிளாஸ்மா சிகிச்சை முறையை WHO பரிந்துரைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது உலகம் முழுவதும் பல கொரோனா நோயாளிகள் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறையால் காப்பாற்றப் பட்டிருந்தாலும் இந்த சிகிச்சை முறை பெரிய அளவிற்கு கொண்டாடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட நபர்களின் பிளாஸ்மாக்கள் கொரோனாவிற்கு எதிராகப் போராடும் ஆற்றல்கொண்ட நோய் எதிர்ப்பு சுரப்பிகளை (Anti-body) தேவையான அளவு வைத்திருக்கும். அதாவது, ஏற்கனவே பாதிக்கப்பட்டு அந்நோயில் இருந்து மீண்ட நபர் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலை பெற்றிருப்பார். இந்த ஆற்றல் அவருக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சையினால் கிடைக்கிறது. இப்படி சிகிச்சையளிக்கப்பட்ட நோயில் இருந்து மீண்டு வந்த நபர்களின் பிளாஸ்மாக்கள் அந்த நோய்க்கான Anti-body களை வைத்திருக்கும். இந்த Anti-body களை புதிதாக நோய் பாதித்த நபர்களின் உடலுக்குள் செலுத்தும் போது கொரோனா வைரஸை அழிப்பதற்கான தேவையான அளவு நோய் எதிர்ப்பு சக்தியை பெறமுடியும்.
ஏற்கனவே ரேபிஸ், டிப்தீரியா போன்ற நோய்களுக்கு சிறந்த சிகிச்சை முறையாகக் கருதப்படுகிறது. ஆனால் கொரோனா நோய்க்கு இந்த முறையைப் பயன்படுத்தும்போது சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. கொரோனா நோயில் இருந்து மீண்டுவந்த ஒரு நபரிடம் இருந்து 800 மில்லி அளவிற்கு இரத்தம் பெறப்படுகிறது. இந்த ரத்தத்தை வைத்துக்கொண்டு 4 நபர்களை காப்பாற்ற முடியும்.
முதலில் நோயில் இருந்து மீண்டு வந்த நபர்களை 2 வாரங்கள் கழித்து 2 முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். அந்தச் சோதனையில் அவருக்கு முற்றிலும் நோய்த் தொற்று இல்லை எனத் தெரிந்தால் மட்டுமே இரத்தத்தை எடுக்க முடியும். அப்படி எடுக்கப்பட்ட இரத்தத்தையும் அப்படியே புதிய நபருக்கு செலுத்த முடியாது. இரத்தத்தில் இன்னும் கொரோனா நோய்க்கிருமிகள் இருக்கிறதா? வேறு நோய்த்தொற்றுகள் ஏதேனும் இருக்கிறதா என பரிசோதனை செய்யப்படவேண்டும். இதற்கு எலிசா சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான மருத்துவ கருவிகளுக்கு இந்தியாவில் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து, பெறப்பட்ட இரத்தத்தில் இருந்து பிளாஸ்மாக்களை மட்டும் பிரித்து எடுக்க வேண்டும். பிளாஸ்மாக்களைத் தவிர மீதியுள்ள ரத்தம் கொடையாளிகளின் உடலுக்குள் மீண்டும் செலுத்தப்படுகிறது. பிளாஸ்மாக்கள் செலுத்தப்பட்ட நபரின் உடலில் அது 42-72 மணி நேரங்களில் வினைபுரிகின்றன. இதற்குப் பின்னர் கொரோனா நோயை எதிர்த்து அவரது இரத்தச் செல்கள் போராடி அவரை நோயில் இருந்து மீட்கிறது.
கொடையாளிகளிடம் இருந்து பெறப்படுகின்ற பிளாஸ்மாக்கள் மற்ற உடலுக்குள் செலுத்தப்படும்போது அது சுறுசுறுப்பாகவும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு முக்கியமான ஆதாரமாகவும், செல்களில் உள்ள படைவீரர்களுக்கு உத்வேகமாகவும் இருக்கிறது. இது வெற்றிகரமான சிகிச்சை முறையாகவே பலராலும் கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இதற்கான உபகரணங்கள், வேலையாட்கள், கருவிகள், மருத்துவப் பணியாளர்கள் என அனைத்திலும் போதாமை நிலவுகிறது. முக்கியமாக இரத்ததைச் சுத்தப்படுத்தும் எலிசா சோதனையை செய்வதற்கு போதுமான கருவிகள் நம்மிடம் இல்லை என்பதே நிதர்சனம்.
கொரோனாவில் இருந்து மீண்டுவந்த நபரிடம் இருந்து 2 வாரங்கள் கழித்தே ரத்தம் பெறப்படுகிறது என்றாலும் முழுவதுமாக கொரோனா வைரஸ் அவரது உடலில் அழிக்கப்பட்டு விட்டதா எனச் சந்தேகமும் எழும்புகிறது. முழுமையாக தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் யாரிடம் கொடை பெறுவது என்ற சந்தேகம் பல நேரங்களில் தொற்றிக்கொள்கிறது. ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாக்களை பிரித்து எடுக்கும்போது கிருமிநீக்கம் முழுமையாக செய்யப்பட்டதா என்ற சந்தேகம் இன்னொரு பக்கம். அடுத்து பிளாஸ்மாக்களை பயன்படுத்தி குணமானவர்களுக்கு திரும்பவும் நோய்த்தொற்று ஏற்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் இதற்கான ஆதாரப்பூர்வமான ஆய்வு எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி பல்வேறு குழப்பங்கள் நீடிக்கும் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை தற்போதுள்ள அவசர கதிக்குப் பொருந்துமா எனப் பலநாடுகளின் அரசுகள் சிந்தித்து வருகின்றன. ஏனெனில் பிளாஸ்மாக்களை பெறுவதிலும் அதை பயன்படுத்துவதிலும் அதிக சிரத்தையும் நேரமும் தேவைப்படுகிறது. பெறப்படுகின்ற பிளாஸ்மாக்களை அனைத்து வயதினருக்கும் கொடுக்கப்பட வேண்டிய கட்டாயம் என்று எதுவும் இல்லை. நோயின் தீவிரத்தில் மாட்டிக்கொண்ட சிலருக்கு இந்த முறையை பயன்படுத்தலாம் என்றாலும் சந்தேகங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments