Pizhai Review
'பிழை' : வாழ்க்கை பிழையை கண்முன் நிறுத்தும் படம்
படிப்பு என்பது வாழ்க்கையில் எந்த அளவுக்கு முக்கியம் என்பதும் பெற்றோர்கள் 'படி படி' என்று சொல்வது பிள்ளைகளின் நன்மைக்கே என்பதை பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கதை தான் 'பிழை'
மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் ஆகிய மூவரும் கல் உடைக்கும் வேலையை கஷ்டப்பட்டு செய்து தங்களுடைய பிள்ளைகள் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று கனவு காண்கின்றனர். ஆனால் அவர்களுடைய பிள்ளைகளான 'காக்கா முட்டை' ரமேஷ், 'அப்பா' நாசத், கோகுல் ஆகிய மூவரும் வகுப்பிலேயே குறைந்த மார்க் வாங்கி, பள்ளிக்கு ஒழுங்காக செல்லாமல் ஊர்சுற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஊர் வம்பையும் விலைக்கு வாங்கி பெற்றோர்களுக்கு கெட்ட பெயரையும் எடுத்து கொடுக்கின்றனர். இதனால் பெற்றோர்களாலும் ஊர் மக்களாலும் வெறுக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சின்ன வயதில் ஊரை விட்டு ஓடிப்போய் பெரிய ஆளாக திரும்பிய இளைஞரை பார்த்து, நாமும் சென்னைக்கு சென்று பெரிய ஆளாக ஊர் திரும்ப வேண்டும் என்றும் நம்மை திட்டிய பெற்றோர்கள் நம் வளர்ச்சியை பார்த்து ஆச்சரியப்பட வேண்டும் என்றும் முடிவு செய்து சென்னைக்கு செல்கின்றனர். சென்னையில் மூவருக்கும் ஏற்படும் அனுபவங்கள், கஷ்டங்கள், ஆபத்துக்கள் ஆகியவை மூவரின் மனதை எப்படி மாற்றுகிறது என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை
மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் மூவரும் ஏழை தகப்பன்கள் என்ற கேரக்டர்களாகவே வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சார்லி இதில் நடிப்பில் முந்துகிறார். அதேபோல் அவர்களுடைய பிள்ளைகளாக நடித்திருக்கும் மூன்று சிறுவர்களும் நடிப்பில் அசத்தியுள்ளனர். ஜார்ஜை அவரது மகன் 'அப்பா' நாசத் ரொம்ப நல்லா படிக்குறவங்களுக்கு 100க்கு 156 மார்க் போடுவாங்க என்று ஏமாற்றுவதும், அதை அப்பாவியாக ஜார்ஜ் நம்புவதும் ரசிக்க வைக்கும் காட்சிகள். கல்லூரி வினோத் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கும் வகையிலான நடிப்பு.
ஃபைசல் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் வகையில் உள்ளது. பின்னணி இசை படத்தின் கதைக்கேற்ப பொருத்தமாக உள்ளது. பக்கியின் ஒளிப்பதிவில் முதல் பாதி கிராமத்து அழகை அழகாக படம் பிடித்துள்ளது.
இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா, இந்த கால பள்ளி குழந்தைகளுக்கு தேவையான ஒரு கதையை தேர்வு செய்து கமர்ஷியல் கலந்து இயக்கியுள்ளார். சென்னைக்கு சென்று நிறைய பணம் சம்பாதித்து பெரிய ஆளாக வேண்டும் என்று கிளம்பும் மூவரும் படிப்பு தான் முக்கியம் என்பதை உணரும் காட்சியை மிக அருமையாக உருவாக்கியுள்ளார். அதேபோல் கிளைமாக்ஸில் மைம் கோபியும் நடிப்பும் அவரது மகன் மனம் திருந்தும் காட்சியும் பார்வையாளர்களை நிச்சயம் கவரும்.
மொத்தத்தில் படத்தில் சின்னச்சின்ன குறைகள் இருந்தாலும் இந்த கால பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் தங்களுடைய ‘பிழை’யை புரிந்து கொள்ள வேண்டிய ஒரு படம் தான் இந்த 'பிழை'
- Read in English