கேரள அரசு, அரசியல் சாசனத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அல்ல..! - முதல்வர் பினராய் விஜயன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள அரசு, அரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டது என்றும் ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் உள்நோக்கம் கொண்ட திட்டங்களுக்கு அல்ல என்றும் தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிறைவேற்றியது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தை எங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் அறிவித்தனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. நேற்று டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தின்போது போலிஸார் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள தியாகிகள் நினைவிடம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிக்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் ஒரே மேடையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
குடியுரிமை சட்டத்தைக் கண்டித்து நடந்த இப்போராட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது, “சிறுபான்மையினருக்கு குடியுரிமை தரக்கூடாது என்று யார் சொன்னாலும் அது பற்றிக் கவலை இல்லை. கேரளாவில் நாங்கள் அதை ஏற்கமாட்டோம். நான் இதைக் கூறும்போது ஒரு மாநில அரசு இதுபோன்ற விவகாரங்களில் முடிவெடுக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். மத்திய அரசு, மாநில அரசு, குடியுரிமை சட்டங்கள் என அனைத்துமே அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாம் எந்த அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி கூறி பதவியேற்றுக்கொண்டு இந்த அரசை அமைத்தோமோ, அந்த அரசியல் சாசனத்தை யார் நாசம் செய்ய நினைத்தாலும் நாங்கள் அதை எதிர்ப்போம். கேரள அரசு, அரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் உள்நோக்கம் கொண்ட திட்டங்களுக்கு அல்ல.” எனத் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments