பிறக்கப்போகும் குழந்தையை பார்க்காமல் உயிரிழந்த விமானி: கேரள விமான விபத்தின் சோகக்கதை
- IndiaGlitz, [Saturday,August 08 2020]
கேரள மாநில விமான விபத்தில் உயிரிழந்த இணைவிமானி அகிலேஷ்குமார் என்பவரின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவருக்கு இன்னும் இரண்டு வாரங்களில் குழந்தை பிறக்கவிருப்பதாகவும் அவருடைய உறவினர்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர். இரண்டு வாரங்களில் பிறக்கப்போகும் குழந்தையை பார்க்காமலேயே விமானி உயிரிழந்தது அவரது குடும்பத்தினர்களை சோக்கடலில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றிரவு துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது திடீரென விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாகவும், 149 பேர்கள் காயமடைந்ததாகவும், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிகிச்சை பெற்று வரும் 22 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பதும் அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்
இந்த நிலையில் இந்த விமானத்தை ஓட்டிய கேப்டன் சாதே மற்றும் இணைவிமானி அகிலேஷ் குமார் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகினர். இந்த நிலையில் இணை விமானி அகிலேஷ்குமாரின் மனைவிக்கு, இன்னும் இரண்டு வாரங்களில் குழந்தை பிறக்கவிருப்பதாக அவருடைய உறவினர் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த உறவினர் மேலும் கூறியபோது, ‘அகிலேஷ் குமார் மிகவும் பணிவான, கண்ணியமான, நல்ல நடத்தை உடையவர்.
அவரது மனைவிக்கு அடுத்த இரண்டு வாரங்களில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் 2017 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார், கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு கடைசியாக வீட்டிற்கு வந்திருந்தார் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.